Wednesday, September 5, 2012

புதுக்குறளோன்

வெண்பா 1 – ஒரு விகற்பக் குறள் வெண்பா

எவரிவர் என்றேஇவ் வையம் வியக்கு
மிவர்தம் புதுக்குறள் கண்டு

வெண்பா 2 – ஒரு விகற்பக் குறள் வெண்பா

எவரிவர் என்றே வியக்குமிவ் வையம்
அவரின் புதுக்குறள் கண்டு

ஆசிரியர்

வெண்பா 4 – ஒரு விகற்பக் குறள் வெண்பா

கடவுள் மறுப்பாளர் கூடஆ சானைக்
கடவுளாய்ப் போற்றல் வியப்பு

வெண்பா 5 – ஒரு விகற்பக் குறள் வெண்பா

கடவுள் மறுப்பாளர் கூடஆ சானைக்
கடவுளாய்ப் போற்ற லறிவு

Tuesday, September 4, 2012

ஆசிரியர்

வெண்பா – 1 - ஒரு விகற்பக் குறள் வெண்பா

எத்தொழிலில் வித்தக ரானாலுங் கல்விக்கு
வித்திட்ட வித்வானைப் போற்று

வெண்பா – 2 - இரு விகற்பக் குறள் வெண்பா

உன்னையேற்றி ஊக்குவித்த உன்னதஆ சான்களைக்
கண்ணைப்போல் காத்த லழகு

வெண்பா – 3 - பல விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா

தன்னல மற்றுன் நலத்திற்கு ழைத்திட்ட
உன்னத ஆசான்க ளையென்றும் உந்தனிருக்
கண்களினும் மேலாகப் போற்று

வெண்டுறை

ஏற்றி விட்ட ஏணியா மாசிரியர்
போற்றிப் புகழ வார்த்தை யில்லை
எதிர்பார்த் துதவிகள் செய்யும் உலகினில்
எதையும் எதிர்பாரா மல்கல்வி கற்பித்த
ஆசான்க ளென்றுமென் தெய்வமே

சர்க்கஸ்

1. சர்க்கஸ் - ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா

சர்க்கஸ் கலைஞருக்கு சர்க்கஸே வாழ்க்கையாம்
சர்க்கஸைப் பார்க்கும் நமக்கெல்லாம் - வாழ்க்கையே
சர்க்கஸாகு மென்ப தறிவு

2. சர்க்கஸ் - இரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா

சர்க்கஸ் கலைஞருக்கு சர்க்கஸே வாழ்க்கையாம்
சர்க்கஸைப் பார்க்கும் நமக்கெல்லாம் - சர்க்கஸ்போல்
வாழ்க்கையா மென்ப தறிவு

Monday, September 3, 2012

வேகாத இட்லி

சமையலில் தேர்ந்தவர் தோழரின்ம னைவி
அமையவில்லை அன்று சமைத்திட்ட பண்டமும்
வேகவைக்கும் பண்டமான இட்லியை வேகாமல்
சாகவைத்தார் ஏனோ யவர்

நீர்ப்பூங்கா

இயற்கைநீரோட் டத்தில்செய் சாகசம னைத்தும்
செயற்கைநீர்ப் பூங்காவி லுஞ்செய்து பார்க்கலாம்
வெக்கையாய் வானிலை வாட்டியெ டுத்தாலும்
தக்கையாய்த் தண்ணீரில் நீந்தி யதனால்
கழிந்தது நன்றாய்ப் பொழுது

தரை நீச்சல்

உள்நீச்சல் மேல்நீச்சல் பல்டியத்துப் பின்னர்
தரைநீச்சல் செய்தல் கடிது

இல் வாழ்க்கை

ஊடலில்லா யில்வாழ்க்கை உண்மையில்லை - அவ்வாழ்க்கை
கூடலி ல்லாது கெடும்

திருமண நாள்

இருமன மொன்றிவாழ் வோர்க்கெந்த நாளும்
திருமண நாளேயா கும்

Friday, August 31, 2012

பெரியோர்

எறும்பையும் யானையாய்ப் போற்றுவார் தம்மை
விரும்பாதார் யாருமி லர்

உருப்படாதோர்

எறும்பையும் யானையா யாக்குவோ ரெல்லாம்
துரும்பைவி டக்கீழா வார்

Tuesday, August 28, 2012

அட்டகத்தி

காதலில் தோல்வியா சாதல் கொடுமை
புதிதாயோர் காதலைத்தொ டங்கு

நான்

துரோகத்தை கண்ணுற்றுத் தண்டித் தவனே
சமூகத்தில் வென்றதைக் காண்

காத்தே பசிக்குணவு

நெத்தி வியர்வை நிலத்தில் விழவுழவு
கத்தி பிடிச்சிச் சிரைச்சாத்தா னேயழகு
சுத்தி வருமிந்தப் பூமிகூட நின்றுபோகும்
புத்தி யிழந்தயிம் மக்கள்தட் டிக்கேட்டால்
சொத்திருக் கும்முத லாளிவர்க் கத்திடம்
பொத்தி யடங்கிப் பிழைக்கு மிவர்க்கெல்லாம்
காத்தே பசிக்கு ணவு

கேத்தே பசிபிக் விமானப் பயணம்

வெண்பா-1

கேத்தே பசிபிக் விமானப் பயணத்தில்
காத்தே பசிக்கு ணவு

வெண்பா-2

கேத்தே பசிபிக் விமானப் பயணமா
யாத்தே இனியெனக்கெக் காலத்தி லும்வேண்டேன்
பொத்தான் அழுத்திப் பொறுத்துப் பொறுமைபோய்
சாத்தானி டம்நேரே சென்றால்தான் நீங்கள்
விரும்பிய துண்ணக் கிடைக்குமே யல்லாதுக்
காத்திருந்தால் வாடும் வயிறு

வெண்பா-3

விமானத்தில் நல்லத்தூக் கம்போட லாமென்றால்
கேபினுக்குள் பாலைவனத் தைப்போலே வெக்கை
பொழுதுபோக் கப்படம் பார்க்கலா மென்றால்
பழுதாகிப் போய்ப்படுத் திட்டதுட்தி ரையரங்கும்
சன்னலோ ரத்திலி ருந்ததால்பக் கத்திலுள்ளோர்
தூக்கம் கெடுத்திடா வண்ணம் இயற்கை
அழைத்தாலும் சற்றுப் பொறுத்துத்தான் சென்றேன்
விமானப் பணிப்பெண் களோயெவ் வளவுச்
சமானம் கொடுப்பி னுமசைவதா யில்லை
கடுகளவி டத்திலே காலசைக் காமல்
மலையளவு தூரங் கடந்திடத் துன்பத்தை
இன்பமாய்ப் போற்றுதல் மேல்

தொழிற்பற்று

செய்யுந் தொழிலை விரும்பாதார் அத்தொழிலை
செய்யினுஞ் செய்யாமை நன்று

வேலையில் அரசியல்

வெண்பா-1

வேலையில் வேண்டாம் அரசியலெ ன்றாலும்
சிலருக்கு வேலையே யஃது

வெண்பா-2

வேலையில் வேண்டாம் அரசியலெ ன்றாலுமே
வேலையே செய்யாதோர் வேண்டியே செய்கிறார்
மூளையற்றுக் காக்காய் பிடிக்கும் மடையர்கள்
வேலை அரசியலா கும்

முகநூல்

முகநூலில் மூழ்கியே மூப்படை யாமல்
பிறநூல்கள் கற்ற லறிவு

அலட்சியம்

ஓட்டையா பேருந்தி னுள்ளேயெ னக்கேட்டால்
ஓட்டை அரசாங்க மையங்க ளேயென்பேன்
வீட்டைவிட்டு நம்பிக்கை யாய்ப்பள்ளிச் சென்றவள்
வேட்டையானா ளேயந்தப் பாவிகள லட்சியத்தால்
சாட்டை யடிக்குமாதீ ர்ப்பு?

இயற்கையும் செயற்கையும்

இயற்கையில் இன்புற்று வாழ்ந்திடா வாழ்க்கை
செயற்கையைச் சேர்ந்து கெடும்

Friday, July 20, 2012

பில்லா-2

உதையும் சதையும் கதையின்றித் தந்தால்
உதைவாங்கி டும்படமே அஃது

Tuesday, July 17, 2012

கபடதாரி கருணாநிதி - 2

பதவியிலி ருந்து உதவாத் தலைவர்
பதவியில்லேல் செய்வார்பா சாங்கு

தமிழினம் வீழ்கையில் பார்த்திட்டத் தாத்தா
தமிழீழம் பெற்றிடுவார் காண்

Monday, July 16, 2012

கபடதாரி கருணாநிதி

பதவியிலி ருந்து உதவாத் தலைவர்
பதவியி லில்லாமல் நாறிடும் வேளை
உதவிடு வாராம் தமிழீழம் பூக்க
உதைவிடுவார் சோனியா வென்றேப் பதறி
அதைவிடுக்கும் ஈனச்செ யல்புரி ந்திட்ட
கருணை யிலாது நிதியைக் குவிக்கும்
கருணா நிதியை வெறு

பசி போக்கல் - புதுக்குறள்

ஈகை அதிகாரம், குறள் - 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

பசி போக்கல் - புதுக்குறள்

பசித்தார் பசிபோக்கல் நோன்பில் புசிக்கா
பசிபொறுத் தாரினும் மேல்

உணவிருந்து முண்ணாது நோன்பிருத்த லன்றி
உணவிலார்க் கன்னமிடல் மேல்

விருந்தோம்பல் - புதுக்குறள்

என் குரு திரு. அஷோக் சுப்ரமணியம் அவர்கள் தினமொரு திருக்குறளுக்கு உரையெழுதியும் அதற்கிணையான புதுக்குறளையும் எழுதி வருகிறார்கள். தமிழிலக்கியங்களின்பால் அவர் கொண்டுள்ள பற்றும் அவரின் வெண்பா எழுதும் திறனும் அவரை அறிந்தோர்க்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவரது இன்றைய குறள்:

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
(குறள் 86: விருந்தோம்பல் அதிகாரம்)

அந்தக் குறளையும், அவரின் விளக்கத்தையும் படித்தவுடன் அதற்கிணையான ஒரு புதுக்குறள் எழுதத் தோன்றியது. அந்தக் குறள்:

விருந்தோம்பல் பண்பினைப் பேணுவோர் தாமே
விருந்தினராம் வானோர வர்க்கு

Tuesday, June 12, 2012

புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு

புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012-ல் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக நான் எழுதிப் பயிற்சியளித்தப் பட்டிமன்றத்தில் இடம் பெற்ற மாநாடு குறித்த வெண்பா, ஹைக்கூ, வசனநடைக் கவிதை இதோ:

புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு - வெண்பா

புலம்பெயர்ந்தோம் தாய்மண்ணை விட்டுவேறு நாடு
உளம்பெய ரோமுயிர்போ னாலு(ம்)மொழி விட்டு
இளம்தலைமு றைத்தமிழில் இன்புற் றிருக்க
உளம்பூரிக் கத்தமிழ்க் கல்வி வழங்கும்
கலிஃபோர் னியத்தமிழ்ப் பள்ளிக் கனவாம்
ஒளிதருங்கல் விக்கோர்மா நாடு

புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு - ஹைக்கூ

சொந்தபந்தம் விட்டு வந்தோம் வெளிநாடு
உயிர் விட்டு உடல் வந்தது போல, ஆனால்
எங்கள் உயிராய் தமிழ்
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு - வசனநடைக் கவிதை (புதுக்கவிதை)

தேடிவந்தோம் திரவியத்தை அயல் நாடு தனில்
கோடி கோடியாய் செல்வம் வந்தாலும் உயிர்
நாடியாய் எங்களுக்கு என்றும் தமிழ்
ஓடிவிளையாடிடும் எங்கள் பிள்ளைகளும்
நாடிவந்து தமிழ் கற்றிடுவார் தமிழ்க் கழகத்திலே
கூடிவந்து நடத்துகிறோம் மாநாடு

பட்டிமன்றத்தின் தலைப்பு “தமிழின் பொற்காலம் கடந்த காலமா? எதிர் காலமா”. தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலக் கலப்பின்றி இந்தப் பட்டிமன்றத்தில் பேசியது மட்டுமல்லாமல் இந்த வெண்பா, ஹைக்கூ, வசன நடைக்கவிதைகளையும் பேசியது மனதுக்கு மகிழ்ச்சியாயிருந்தது.

Saturday, June 2, 2012

விட்னி

விட்னி யெனுமொரு மாமலை சென்றிட்டேன்
சட்னி எனவான துச்சி தொடுமாசை
வானிலை வாட்டி வதைத்தது ஓர்நாளில்
என்னிலை இப்படி ஏனென நொந்திடாமல்
முன்னிலை லாட்டரியில் வென்றிட்ட சீட்டதைப்
பெற்றே தொடங்கினோம் மீண்டுமொரு நாளிலே
சற்றே மெதுவாய் தொடங்கியதால் மீண்டுமே
தூரம் அதிகம் துரிதமாய் எட்டாது
நேரம் கருதி சிகரமது ஏறாது
ஏக்கம் அடைந்து சிகரத்தை நோக்கினேன்
தாக்கம் விலகா மனது

அதித்தி

தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தேர்வில் 100% மதிப்பெண்கள் பெற்றதற்கு என் வாழ்த்துகள் அதித்தி!!! உனக்குத் தமிழ் கற்பித்த கலிஃபோர்னியத் தமிழ்க் கழக ஆசிரியை தேன் மொழி அவர்களுக்கும் அந்த வகுப்பில் அவருக்கு உதவியாயிருந்த தன்னார்வலர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!! உன்னுடன் தேர்ச்சி பெற்றிருக்கும் உன் வகுப்பு மாணவ மாணவியருக்கும் என் வாழ்த்துகள்!!!
உன் உழைப்புக்குக் கிடைத்த வெற்றிக்கு என்னால் இயன்ற ஒரு வெண்பா:

அதித்தி
மனப்பாடம் செய்யாது ஆர்வம் மிகுந்து
மனதூன்றிக் கற்றாயே வான்போற்றும் தாய்த்தமிழை
என்றுமே உன்னுழைப்பு ஏமாற்றி டாதென
வென்றாயே தேர்வினில் நூறு

Saturday, May 5, 2012

வழக்கு எண் 18/9

வழக்கு எண் 18/9 சாதாரண ஒரு திரைப்படமல்ல. அது ஒரு வாழ்க்கைப் பதிவு. தமிழ்த் திரைப்படத்தை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் ஒரு அற்புத அனுபவம். ஷங்கரின் கனவுலகத்தில் தொழில் கற்றாலும் அதை விடுத்து நிஜவுலகைத் திரையில் காட்டியதில் அவரின் உதவியாளர்களில் வசந்த பாலனும், பாலாஜி சக்திவேலும் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழ்த் திரைப்படங்களில் யதார்த்தம் அவ்வளவாக காட்டப்படுவதில்லை என்ற ஏக்கத்தைப் போக்கிடும் இந்த வழக்கு எண். அதிர வைக்கும் இசையும் பாடல்களும் இல்லாமல் கதையோட்டத்திற்கேற்ற கன கச்சிதமான இசையை வழங்கியிருக்கும் கிட்டார் ப்ரசன்னா பாராட்டுதலுக்குரியவர். ஒளிப்பதிவில் கலக்கியிருக்கும் விஜய் மில்டன், ஆழமானக் கதையை துணிச்சலாக இயக்கியிருக்கும் பாலாஜி சக்திவேல், இப்படியோர் நிதர்சனத்தை திரையில் கொண்டுவரத் தன் பணத்தை செலவழித்திருக்கும் தயாரிப்பாளர் லிங்குசாமி (இவர் மசாலா படங்களின் இயக்குநராகயிருந்தாலும்), படத்தில் நடிக்காமல் அந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கும் புதுமுக நடிக, நடிகையர்கள் இவர்களனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இது போன்ற நல்ல திரைப்படங்களை திருட்டு விசிடியிலும் இணயத்தளத்திலும் பார்க்காமல் திரையரங்கில் மட்டும் பார்க்கும் நல்ல தமிழ் ரசிகர்கள்தான் பாலாஜி சக்திவேல், லிங்குசாமி அவர்களுக்கு உண்மையான உற்சாகத்தை வழங்கி மேலும் தரமான படைப்புகளை அவர்கள் வழங்குவதற்கு உந்துதலாயிருக்க முடியும்.

இந்த வருடம் தமிழ்த்திரையுலகிற்கு வழக்கு எண் தேசிய விருது வாங்கித்தருமென்று நம்புகிறேன். இதோ இந்த நல்ல திரைப்படத்திற்கு என் வெண்பா:

வழக்கு எண் 18/9

வழக்குஎண் என்னும் திரைப்படம் கண்டேன்
வழக்கமாய் பார்த்த கதையில்லை என்பேன்
உழக்களவு கூட சரக்கில்லா குப்பை
பழக்கத் திலெடுத் திடும்கோலி வுட்டின்
கிழக்கென வந்த வழக்குஎண் காண்பீரே
குண்டுசட் டிக்குதிரை யோட்டிகள் செய்துவரும்
தொண்டுக்கு ஓய்வளிக்கும் காண்

Monday, April 30, 2012

வாழ்க்கைப் பயணம்

ஆண்டொன்று போனால் வயதொன்று போகுமென்பார்
நீண்டிடும் வாழ்க்கையினில் பட்டறிவும் நீளுமென்பேன்
வேண்டினேன் நல்லமனம் உள்ளவர்கள் நட்பதனை
வேண்டாமே வாழ்வினில் சூது

முகநூலிலும் சாதியா?

படித்தவர்கள் அதிகம் பயன்படுத்தும் முகநூலில் (Facebook) கூட சாதி மேடை போட்டு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது மிகவும் ஒரு வேதனையான விடயம். அதிலும் சாதிகளுக்கெனப் பல முகநூல் பக்கங்கள் காளான்கள் போல் முளைப்பதைப் பார்த்தால் நாம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோமோ எனும் ஐயம் எழுகிறது. அந்த சாதியப் பக்கங்கள் தேவையா எனக் கேட்கும் வண்ணம் இந்த வெண்பாவை வடித்திருக்கிறேன்.

முகநூலிலும் சாதியா?

யாருப்பா சாதிகளி ரண்டுதான் என்றது
பாருப்பா சாதிகளின் பக்கங்கள் எவ்வளவு
ஏனப்பா எல்லாம் தெரிஞ்சும் முகநூலில்?
வீணப்பா இத்தனை சாதிய பக்கங்கள்
முன்நோக்கி சென்றிடும் நம்மினத்தை, சாதிப்பேய்
பின்நோக்கி தள்ளிடுமே, பொல்லாத பேயது!
பற்றுதலாய் அப்பேயைப் போற்றியே காத்திட்டால்
கற்றதனா லென்ன பயன்?

Friday, April 27, 2012

சச்சினின் புது ஆட்டம்

பதிப்பு - 1


சச்சின வர்க்ரிக்கெ ட்டில்சாத னையாட்டம்
நச்சென ஆடுவாரா மேல்சபையி லாட்டம்
எடுப்பாரா கூட்டத்தில் மக்களவர் வாட்டம்
தடுப்பாட்டம் வேண்டா மது

பதிப்பு - 2


சச்சினவர் க்ரிக்கெட்டின் சாதனை யுச்சியில்
நச்சென ஆடுவாரா மேல்சபையி லாட்டம்
எடுப்பாரா கூட்டத்தில் மக்களவர் வாட்டம்
தடுப்பாட்டம் வேண்டா மது

பதிப்பு - 3


சச்சினவர் க்ரிக்கெட்டின் எட்டாத சாதனை
உச்சத்தில் சென்றாலும் கேட்பார்நல் போதனை
ஆட்டமுண்டு மேல்சபையின் கூட்டத் தினில்
வாட்டமது வேண்டாம் இனி

பதிப்பு - 4


சச்சின வர்க்ரிக்கெ ட்டில்சாத னையாட்டம்
நச்சென ஆடுவாரா மேல்சபையில் நல்லாட்டம்
வேண்டும் அடித்தாடும் வேங்கைபோல் துள்ளாட்டம்
வேண்டாம் தடுப்பாட் டமது

பதிப்பு - 5


சச்சினவர் க்ரிக்கெட்டின் சாதனை யுச்சியில்
நச்சென ஆடுவாரா மேல்சபையில் நல்லாட்டம்
வேண்டுமே வேதனை தீர்க்கும்நல் வேகமது
வேண்டாம் தடுப்பாட் டமது

Thursday, April 26, 2012

தமிழ்த்தேன்

தமிழ் கற்கவா வெந்தன் முகநூல்
இமிழ்குரல் கேட்டு இணைந்துவி ட்டால்
உமிழ்நீர் ஒழுகத் தமிழ்த்தேன் பருக
அமிழ்வோம் தமிழ்க்க டலுள்

Wednesday, April 25, 2012

தமிழின மீட்சி

முன்னுரை


உலகத்தையே ஆண்ட தமிழினம் இன்று உலகில் பல் வேறு இடத்தில் சிதறித் தமிழின உணர்வை இழந்திட்டதோ என்று ஐயுற்றதால் விளைந்த வெண்பா இது. இந்த வெண்பா ஒரு விகற்ப பஃறொடை வெண்பா வாகும்.

தமிழின மீட்சி


திரைகட லோடி திரவியந் தேடி
தரைகட லெல்லாம் தமிழனின் ஆட்சி
புரையுந ரின்றே திகழ்ந்தது மாட்சி
புரைகொ ண்டயினம் புரண்டிட்ட வீழ்ச்சி
புரையோடிப் போயினும் பெற்றிடுமா மீட்சி
கரையேறும் காலம் எது

அருஞ்சொற்பொருள்


புரையுநர் - ஒப்பவர் (rivals, equals)
புரை - பெருமை
புரையோடி - infected புரையோடிய புண் என்பார்கள்.

விளக்கம்


விகற்பம் = எதுகை வகை (variety). எதுகையென்பது அடியின் முதலில் வரும் சீர்களின் இரண்டாவது எழுத்துப் பொருந்தி வருவதைக் குறிக்கும். அதே நேரத்தில் முதல் எழுத்து ஒலியளவில் (மாத்திரை) ஒத்திருக்க வேண்டும். எ.கா. பதுமை, புதுமை. ஆனால், மெட்டு, போட்டு இவ்விரண்டும் எதுகை ஆகாது. மெ - குறில், போ - நெடில் - ஆகவே ஒலியளவு மாறுபடும்.

பஃறொடை - பல தொடை. தொடை என்றால் இரண்டு அடிகள் எனப் பொருள். வெண்பா என்று பொதுவாகச் சொன்னால் அதில் நான்கு அடிகள் இருக்க வேண்டும். 5-லிருந்து 12 அடிகள் வரையில் அமையும் பாக்கள் பஃறொடை வெண்பாவாகும்.

மேலே நானெழுதிய “தமிழின மீட்சி” என்ற பா, நான்குக்கு மேற்பட்ட அடிகளையும் (6 அடிகள்), எல்லா அடிகளிலும் ஒரே எதுகை (ரை)யும் பெற்று வருவதால் அது ஒரு விகற்ப பஃறொடை வெண்பாவாகிறது.

Tuesday, April 24, 2012

வெண்பா ஓசைகள்

இன்றைய வெண்பாக்கள் வெண்பா ஓசைகளை விளக்கும் வண்ணம் அமைத்திருக்கிறேன். ஓசையைக் கணக்கிடும்போது ஈற்றுச் சீரைக் கணக்கில் சேர்க்கக் கூடாது.

1. ஏந்திசைச் செப்பலோசை - வெண்பா முழுவதும் வெண்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும். வெண்சீர் வெண்டளை = காய் முன் நேர்

கண்டு கொள்ளாதே - ஏந்திசைச் செப்பலோசை

துன்பத்தில் தள்ளிநின்று இன்பமதைக் கண்டிடுவார்
முன்புகழ்ந்து பின்னிகழ்ந்து துன்பமதைச் செய்திடுவார்
எண்ணற்ற மாந்தரவர் புன்செயலில் தோய்ந்திடுவார்
கண்ணுற்றும் காணாதல் மேல்

2. தூங்கிசைச் செப்பலோசை - வெண்பா முழுவதும் இயற்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும். இயற்சீர் வெண்டளை = மா முன் நிரை, நிரை (விளம்) முன் மா

கண்டு கொள்ளாதே - தூங்கிசைச் செப்பலோசை - பதிப்பு 2

பிறரது துன்பம் அவர்க்கது இன்பம்
புறமது பேசி மனமே மகிழுவார்
எண்ணில் அடங்கிடாப் புன்செயல் செய்குவார்
கண்டும் விடுதல் அறிவு
ஓரசைச் சொற்களான பிறர், புறம் ஆகியவை வந்ததால் தளை தட்டிய வெண்பா - தூங்கிசைச் செப்பலோசை - பதிப்பு - 1:
பிறர் துன்புற இன்பம் அடைவார்
புறம் பேசியே நெஞ்சம் மகிழுவார்
எண்ணில் அடங்கிடாப் புன்செயல் செய்குவார்
கண்டும் விடுதல் அறிவு

3. ஒழுகிசைச் செப்பலோசை - வெண்பாவில் இயற்சீர் வெண்டளைகளும் வெண்சீர் வெண்டளைகளும் மட்டுமே வர வேண்டும்.

கண்டு கொள்ளாதே

பிறர்காணும் துன்பத்தில் இன்பமதைக் காண்பார்
புறம்பேசும் இன்பத்தில் நன்பொழுதைப் போக்குவார்
எண்ணற்ற மாந்தரவர் புன்செயல்தான் செய்திடுவார்
கண்ணுற்றும் காணாதல் மேல்

Monday, April 23, 2012

சகோதர யுத்தம்

ஈழத்தில் நேர்ந்த இழவுக் குமுகவும்
கீழிறங் கிச்சகோத ரச்சண்டை என்றாரே
நேர்காணல் வைத்தார் இளையவர் ஸ்டாலின்
முழுக்கோணல் ஆக்கினார் அண்ணன் அழகிரி
கண்டோம் சகோதரப் போர்

சகோதரிகள் நாடகம்

உடன்பிற வாசசியை நீக்கி யதும்ஜெ
உடனே அபிமானி கள்போட்டா ர் கள்ஜேஜே
ராசிபலன் பார்த்து நடந்த தொருக்கூத்து
தூசியோ தொண்டர் நிலை

Thursday, April 19, 2012

அக்கினி - 5 (பல விகற்ப இன்னிசை வெண்பா)

சீறி யது அக்கினி ஏவுகணை
கூறி யதுலகுக்கு இந்தியத்தி றன்தனை
அச்சுறுத் தல் அருகாமை நாடுகள்தான்
துச்சமினி நாமில்லை காண்

அக்கினி - 5 - பதிப்பு - 2


சீறி யது அக்கினி ஏவுகணை
கூறி யதுலகுக்கு இந்தியத்தி றன்தனை
வாலாட்டும் அண்டை அயல் நாடுகளே
துச்சமினி யாமில்லை காண்

என் முதல் நிலைமண்டில/அடிமறி மண்டில ஆசிரியப்பா

வசந்த்


வசந்தப் பருவ வசந்தமும் நீயே
இளவேனில் கால அழகுவேள் நீயே
துறுதுறு சுட்டிச் சிறுவனும் நீயே
சுறுசுறு ப்பான தேனீயும் நீயே
கோபால் பெற்ற இளவல் நீயே
ஜெனிட்டா சுமந்த ஜனனம் நீயே
வாழ்வில் என்றும் வசந்தம் நீயே

வசந்த் - பிறந்த நாள் வாழ்த்து (பல விகற்ப இன்னிசை வெண்பா)

வசந்தப் பருவ வசந்தமும் நீயே
இளவேனில் கால அழகுவேள் நீயே
துறுதுறு சுட்டிச் சிறுவனும் நீயே
மகிழ்ச்சிதான் என்றும் இனி

மின்குழு இழைகள் (பல விகற்ப இன்னிசை வெண்பா)

மின்கு ழுவிழைகள் தன்னிலே நான்சிக்க
பன்மடங்கு நேரமும் தான் விரயமாக
எண்ணற்ற மின்மடல்கள் இன்றள வும்தேங்க
கெட்டதே யென்ன லுவல்

Wednesday, April 18, 2012

கண் துடைப்பு

கண் துடைப்பு (பல விகற்ப பஃறொடை வெண்பா)


ஈழம் கிளம்பியது வீணர்கள் கூட்டம்
தமிழினத் தின்மேல் சிறிதுமில்லை நாட்டம்
இலங்கையில் தேநீர் விருந்துகள் கொண்டாட்டம்
தன்மானம் வாழ்வுரிமை மீண்டதென தம்பட்டம்
பொய்யுரைக்கக் கூசாம னம்

Tuesday, April 17, 2012

எது தமிழ்ப்புத்தாண்டு?

எது தமிழ்ப்புத்தாண்டு? (பல விகற்ப பஃறொடை வெண்பா)


தமிழ்ப் புத்தாண்டு சித்திரையோ தையோ
முகவும் ஜெயும் குய்யோ முறையோ
தமிழர்கள் சாதி மதம் விட்டு
தமிழினம் ஒன்றென்று சேர்வார் களோ
புத்தாண்டு அன்றே அது

Friday, April 13, 2012

தேர்வு

தேர்வு


மழலைப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்க்குக் கூட நுழைவுத்தேர்வு இருக்கிறது. ஆனால், நம்மை ஆள்பவர்களுக்கு/ஆளப்போகிறவர்களுக்கு தேர்தலில் நிற்பதற்கு முன்னால் அதற்குத் தகுதி இருக்கிறதா என்று பார்ப்பதற்கு ஏன் ஒரு தேர்வு கூட இல்லை? இந்த ஆதங்கத்தை வெண்பாவாக வடித்தால் என்ன என்று தோன்றியது. இந்தக் கருத்தை சில வகை வெண்பாக்களாக எழுதியிருக்கிறேன்.

ஒரு விகற்ப குறள் வெண்பா

தேர்வெதற்கு பிஞ்சுகள் பள்ளியில் சேர்வதற்கு
தேர்வின்றே ஆளுவோரைக் கேள்

ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா

தேர்வெதற்கு பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கே
தேர்விலைஊ ழல்அரசி யல்வாதி ஆள்வதற்கே
தீர்வதுகற் றோர்நாடாள் தல்

ஒரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா

தேர்வெதற்கு பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கே
தேர்விலை நம்மையா ள்வோருக்கே-- தீர்வது
கற்றவ ராட்சிசெய் தல்

தேர்வெதற்கு பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கே
தேர்விலைஊ ழல்அரசி யல்வாதி-- தேர்வதற்கே
தீர்வதுகற் றோர்நாடாள் தல்

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

தேர்வெதற்கு பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கே
தேர்விலைஊ ழல்அரசி யல்வாதி ஆள்வதற்கே
தேர்வுவேண் டும்தகுதி யுண்டெனச் சொல்வதற்கே
தீர்வதுகற் றோர்நாடாள் தல்

வெண்கலிப்பா

தேர்வெதற்கு பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கே
தேர்விலைஊ ழல்அரசி யல்வாதி ஆள்வதற்கே
தேர்வுவேண் டும்தகுதி யினைப் பார்ப்பதற்கே
தீர்வதுகற் றோர்நாடாள் தல்

Thursday, March 29, 2012

புதுக்குறள் - 4

புதுக்குறள் - 4


முகநூலில் சேர்ப்பது நட்பன்று உள்ளத்
தகநூலில் கோர்ப்பதாம் நட்பு

என் முதல் ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா

என் முதல் ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா



தேர்வு


தேர்வெதற்கு பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கே
தேர்விலைஊ ழல்அரசி யல்வாதி ஆள்வதற்கே
தீர்வதுகற் றோர்நாடாள் தல்

புதுக் குறள் - 3

புதுக் குறள் - 3


உடைந்த நட்பு


கோபத்தி னாலுடையும் நட்புநட்பா காதஃது
ஆபத்தி னெல்லாம் பெரிது

மேலுமொரு பொருத்தமான ஈற்றடி


ஆபத்தென் றுக்கண்டு கொள்

Wednesday, March 28, 2012

நன்றி வெண்பா

நன்றி வெண்பா - பல விகற்ப பஃறொடை வெண்பா


நன்றாய் அலகிட்டீர் வெண்பா பிடித்ததால்
வென்றாய் மனதை அசைசீர் பிரித்ததால்
இன்றேயென் நன்றியைப் பாவில் வடித்தேனே
என்றுயாப்பு என்கையில் கிட்டும், துடித்தேன்
இலக்கணக் கூறுகள்ஏந் திட்டநின் சொற்கள்
பலக்கணத் தில்எனைம யக்கிடும் தென்னங்கள்
பற்பலப்பாக் கள்நான்வ டிப்பேனே இங்கு
தினம்தினம் பாக்களென் பங்கு

என் முதல் பல விகற்ப பஃறொடை வெண்பா

என் முதல் பல விகற்ப பஃறொடை வெண்பா

அதுவொரு காலம்


முகநூல் கணினி ஒலிவட்டு காணொளி
மின்குழுவ லைப்பூ இணையமு மில்லை
அலுவல் கடிதம் பயணம் விரைவில்லை
ஆயின் மனங்கள் இணைந்திட்ட காலமவை
போயின வாரா தினி

அதுவொரு காலம்

அதுவொரு காலம்


கணினி இணையம் அலைபேசி டிஷ்ஷில்லை
காரியம் அஞ்சல் எதுவும் துரிதமில்லை
ஆயின் மனங்கள்ஒன் றானதொரு காலமது
இன்றோமா யையில் மதி

மேலும் சில பொருத்தமான ஈற்றடிகள்


இன்றோமா யம்தான்ம னம்
மானுடம் மாய்ந்ததிக்கா லம்

Tuesday, March 27, 2012

இந்தியச் சுவர் ட்ராவிட்

இந்தியச் சுவர் ட்ராவிட் - வெண்பா


இந்திய க்ரிக்கெட் அணிக்கிவ ரேசுவர்
ஈடிணையில் லாபேட்ஸ்மென் ட்ராவிட் இவர்பெயர்
கூக்ளியோ யார்க்கரோ தாண்டாதி வர்மட்டை
ஹூக்புல்ஷாட் ட்ராவிட்பா ட்டை

நூறு சதங்களடித்த நாயகன் சச்சின்

நூறு சதங்களடித்த நாயகன் சச்சின் - வெண்பா


கிரிக்கெட்டில் நூறு சதமடித்த சச்சின்
சரித்திர சாதனையைப் போற்ற மனமின்றி
ஓய்வுபெறத் தூண்டிய ஆற்றாமை வீரர்காள்
ஓய்ந்திடாது சச்சினின்ஆட் டம்

வெண்பா எழுதினேன் நண்பா

வெண்பா எழுதினேன் நண்பா



இலக்கணத் துள்கடின மென்றா லதியாப்பு
சற்றுத் தளைதட்டின் வைத்துவிடும் ஆப்பு
தளர்ந்திடாமல் கற்றுத் தெளிந்திட் டதால்நண்பா
கைவந்த திந்தநல்வெண் பா

என் முதல் இன்னிசை வெண்பா

என் முதல் இன்னிசை வெண்பா

கற்பேன் தமிழை!!!


தக்கை இலகாய் நறுந்தமிழை கற்றிடுவேன்
மொக்கைபோ டாத்தமிழா சான் பயிற்றுவித்தால்
சக்கை எனவே நசிந்தமன வாட்டத்தை
தன்கையினாற் தேற்றுந் தமிழ்

கற்பேன் தமிழை!!! - 2


தக்கை இலகாய் நறுந்தமிழை கற்றிருப்பேன்
மொக்கை இடாத தமிழறிஞர் நட்பிருந்தால்
சக்கை எனவே நசிந்தமன ஓட்டத்தின்
போக்கைத் திருப்பும் தமிழ்

Monday, January 30, 2012

புதுக்குறள் - 2

புதுக்குறள் - 2



அறிவால் பகைமை களைதலே அல்லால்
அரிவாள் பிடித்தல் அழிவு

அரிவாள் - Sickle - a weapon with a sharp blade
அறிவால் - Using intelligence

விளக்கம்


பகைமையை ஆயுதம் ஏந்தாமல் சாமர்த்தியமாக அறிவால் வெல்வதே சிறப்பு
Use intelligence to defeat enemies than violence (weapons).

புதுக்குறள் - 1

புதுக்குறள் - 1


தொடரல் கடினம் அனைவர்க்கும் அன்றி
தொடங்கல் மிகவும் எளிது

விளக்கம்:


ஒரு செயலைத் தொடங்குதல் சுலபம். ஆனால் தொடருதல் கடினம்.
Its easier to start anything but difficult to sustain.

Wednesday, January 18, 2012

வார இறுதி

வார இறுதி


பிறந்த நாளா, கொண்டாட்டம் வார இறுதியில்
பண்டிகையா, கொண்டாட்டம் வார இறுதியில்
வேண்டியவர்கள் கலந்து கொள்வார்கள் என்ற உறுதியில்
ஒரு வேளை இறந்தாலும் வார இறுதியில்
இறந்தால்தான் வந்திடுவார்களோ, தெரிந்தவர்களும் சடுதியில்
இல்லையேல் இருந்திடுமோ பூதவுடல் சவ விடுதியில்

தமிழன்

முன்னுரை

பல வருடங்களாகவே என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் குறித்த என் வேதனையை புதுக்கவிதையாக வடிக்க முயற்சித்திருக்கிறேன். இது புதுக்கவிதையா இல்லை உரை நடையா என்பதெனக்குத் தெரியாது. ஆனால் என் உணர்வுகளை எனக்குப் பிடித்த தமிழில் வடிக்க மட்டும் தெரியும். இதைப் படிக்கும்போது நகைச்சுவை நட்சத்திரம் விவேக் அவர்கள் படிப்பது போல் படித்தால் நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஒலி வடிவம் கேட்க இங்கே சுட்டுக.

தமிழன்


வந்தாரை வாழ வைக்கிறவன் தமிழன்
இப்ப வந்து போன இடத்திலெல்லாம் அடி வாங்குறதும் தமிழன்
வளமாத்தான்யா ஓடுது காவிரி
தமிழன் தண்ணி கேட்டான்னா மட்டும் கை விரி
நெய்வேலியிலேருந்து எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்குறீங்க நிலக்கரி
அதைப்பத்தி கேட்டா அது மத்திய வளம், தண்ணீர் மாநில வளம் அப்படின்னு பேசியே தமிழன் முகத்தில பூசுறீங்களே நல்லா கரி
சேட்டா, பத்திரமா கட்டிக்கடா அ(ர)ணை
தமிழன் நயன் தாரா அமலா பாலுக்கு கோவில் கட்டுவான், அவனுக்கேதுடா சொரணை?
ஆஸ்திரேலியாவில ஒரு சிங்கை கொன்னுட்டா அர்த்த ராத்திரியில் ஃபோன் போடுவாரு டர்பன் சிங்
தினம் தினம் தமிழ் மீனவனை அடிச்சாலும் கொன்னாலும் எனக்கென்னான்னு இருக்குறதுல சிங் ஈஸ் கிங்
ஓகேனக்கல், சபரி மலை எல்லாமே இந்தியாவின் உடமை
தமிழன் அங்கேயெல்லாம் போறதுக்கு கூட பாதுகாப்பு கேட்கிற நெலமை ரொம்ப கொடுமை
இந்தியை வச்சு அரசியல் பண்ணினாரு தமிழ் ஐய்யா
தமிழனை காப்பாத்த வேண்டிய நேரத்துல கையை விரிச்சது சரியாய்யா?
கச்சத்தீவை மீட்பேன்னு வசனம் உட்டது அம்மா
காரியத்தில ஒண்ணும் இல்லை, எல்லாமே சும்மா
கப்பல் படையிலேயே சேராம ஒருத்தரு ஆயிட்டாரு கேப்டன்
கட்டிங்கை போட்டுட்டு கண்டபடி திட்டியே ஆயிட்டாரு டாப் டவுன்
உணர்வை மட்டுமே வச்சிருக்காரு வைகோ
அரசியல் செல்வாக்கு இல்லாததால டர்பன் சிங் சொல்வாரு “அரே யார் வைகோ, சும்மா போய்க்கோ”
அடிக்கடி தமிழன் உணர்ச்சிகளை தூண்டி விடற அல்லக்கை அரசியல்வாதிகள் கொஞ்சம் பேர் இருக்காங்க பாஸு
அவுங்க பேச்சை நம்பி ஏமாந்துடாதீங்க, அவனுங்கெல்லாம் சும்மா டம்மி பீஸூ
தமிழன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்
தலையில இடியே விழுந்தாலும் தூங்குவான்
எப்பவாவது தன் இனத்துக்காக ஏங்குவான்
உணர்ச்சி வசப்பட்டு தீக்குளிச்சு அவனையே நம்பி இருக்கிறவங்க உயிரை வாங்குவான்
இதையெல்லாம் எழுதி நான் பேச வரலைய்யா பிரிவினை
இந்த பதிவு கொஞ்சமாவது தூண்டுமா தூங்கிக்கிட்டிருக்கிற தமிழன் உணர்வினை?
இப்படி சொந்த நாட்டிலேயே பக்கத்து மாநிலத்து கிட்ட தொங்கறதுக்கு தமிழன் என்ன கையேந்தியா?
அதுக்குத்தான்யா வைகோ சொன்ன மாதிரி உருவாகணும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா

- உணர்வுள்ள தமிழன்

இணையச் சுதந்திரம்

இணையச் சுதந்திரம்


SOPA, PIPA இவ்விரண்டிற்கும் ஆப்பா(ய்)
மக்கள் எதிர்ப்பலை மேலிருப்போம் HOPE-A(ய்)
காங்கிரஸ் ஓட்டெடுப்பில் கிடைத்திடுமா நல்லதொரு தீர்ப்பா(ய்)?

அலைபேசி

அலைபேசி


வாகனத்தில் அவசியமா அலைபேசி?
எமவாகனத்தில் சென்றிடவா
நீ யோசி!

தொழில் நுட்பம்

தொழில் நுட்பம்


தொழில்நுட்ப வளர்ச்சிகளால்
சுருங்கியது உலகமும்
மனிதமும்!

உச்சரிப்பு

உச்சரிப்பு


உச்சரிப்பில் பிழைகளென அனுதினமும் ஆர்ப்பரிப்பு
பெற்றோர்களுக்கு ஆங்கிலத்திலும்
பிள்ளைகளுக்கு தமிழிலும்