Tuesday, April 24, 2012

வெண்பா ஓசைகள்

இன்றைய வெண்பாக்கள் வெண்பா ஓசைகளை விளக்கும் வண்ணம் அமைத்திருக்கிறேன். ஓசையைக் கணக்கிடும்போது ஈற்றுச் சீரைக் கணக்கில் சேர்க்கக் கூடாது.

1. ஏந்திசைச் செப்பலோசை - வெண்பா முழுவதும் வெண்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும். வெண்சீர் வெண்டளை = காய் முன் நேர்

கண்டு கொள்ளாதே - ஏந்திசைச் செப்பலோசை

துன்பத்தில் தள்ளிநின்று இன்பமதைக் கண்டிடுவார்
முன்புகழ்ந்து பின்னிகழ்ந்து துன்பமதைச் செய்திடுவார்
எண்ணற்ற மாந்தரவர் புன்செயலில் தோய்ந்திடுவார்
கண்ணுற்றும் காணாதல் மேல்

2. தூங்கிசைச் செப்பலோசை - வெண்பா முழுவதும் இயற்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும். இயற்சீர் வெண்டளை = மா முன் நிரை, நிரை (விளம்) முன் மா

கண்டு கொள்ளாதே - தூங்கிசைச் செப்பலோசை - பதிப்பு 2

பிறரது துன்பம் அவர்க்கது இன்பம்
புறமது பேசி மனமே மகிழுவார்
எண்ணில் அடங்கிடாப் புன்செயல் செய்குவார்
கண்டும் விடுதல் அறிவு
ஓரசைச் சொற்களான பிறர், புறம் ஆகியவை வந்ததால் தளை தட்டிய வெண்பா - தூங்கிசைச் செப்பலோசை - பதிப்பு - 1:
பிறர் துன்புற இன்பம் அடைவார்
புறம் பேசியே நெஞ்சம் மகிழுவார்
எண்ணில் அடங்கிடாப் புன்செயல் செய்குவார்
கண்டும் விடுதல் அறிவு

3. ஒழுகிசைச் செப்பலோசை - வெண்பாவில் இயற்சீர் வெண்டளைகளும் வெண்சீர் வெண்டளைகளும் மட்டுமே வர வேண்டும்.

கண்டு கொள்ளாதே

பிறர்காணும் துன்பத்தில் இன்பமதைக் காண்பார்
புறம்பேசும் இன்பத்தில் நன்பொழுதைப் போக்குவார்
எண்ணற்ற மாந்தரவர் புன்செயல்தான் செய்திடுவார்
கண்ணுற்றும் காணாதல் மேல்

No comments:

Post a Comment