Saturday, May 5, 2012

வழக்கு எண் 18/9

வழக்கு எண் 18/9 சாதாரண ஒரு திரைப்படமல்ல. அது ஒரு வாழ்க்கைப் பதிவு. தமிழ்த் திரைப்படத்தை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் ஒரு அற்புத அனுபவம். ஷங்கரின் கனவுலகத்தில் தொழில் கற்றாலும் அதை விடுத்து நிஜவுலகைத் திரையில் காட்டியதில் அவரின் உதவியாளர்களில் வசந்த பாலனும், பாலாஜி சக்திவேலும் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழ்த் திரைப்படங்களில் யதார்த்தம் அவ்வளவாக காட்டப்படுவதில்லை என்ற ஏக்கத்தைப் போக்கிடும் இந்த வழக்கு எண். அதிர வைக்கும் இசையும் பாடல்களும் இல்லாமல் கதையோட்டத்திற்கேற்ற கன கச்சிதமான இசையை வழங்கியிருக்கும் கிட்டார் ப்ரசன்னா பாராட்டுதலுக்குரியவர். ஒளிப்பதிவில் கலக்கியிருக்கும் விஜய் மில்டன், ஆழமானக் கதையை துணிச்சலாக இயக்கியிருக்கும் பாலாஜி சக்திவேல், இப்படியோர் நிதர்சனத்தை திரையில் கொண்டுவரத் தன் பணத்தை செலவழித்திருக்கும் தயாரிப்பாளர் லிங்குசாமி (இவர் மசாலா படங்களின் இயக்குநராகயிருந்தாலும்), படத்தில் நடிக்காமல் அந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கும் புதுமுக நடிக, நடிகையர்கள் இவர்களனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இது போன்ற நல்ல திரைப்படங்களை திருட்டு விசிடியிலும் இணயத்தளத்திலும் பார்க்காமல் திரையரங்கில் மட்டும் பார்க்கும் நல்ல தமிழ் ரசிகர்கள்தான் பாலாஜி சக்திவேல், லிங்குசாமி அவர்களுக்கு உண்மையான உற்சாகத்தை வழங்கி மேலும் தரமான படைப்புகளை அவர்கள் வழங்குவதற்கு உந்துதலாயிருக்க முடியும்.

இந்த வருடம் தமிழ்த்திரையுலகிற்கு வழக்கு எண் தேசிய விருது வாங்கித்தருமென்று நம்புகிறேன். இதோ இந்த நல்ல திரைப்படத்திற்கு என் வெண்பா:

வழக்கு எண் 18/9

வழக்குஎண் என்னும் திரைப்படம் கண்டேன்
வழக்கமாய் பார்த்த கதையில்லை என்பேன்
உழக்களவு கூட சரக்கில்லா குப்பை
பழக்கத் திலெடுத் திடும்கோலி வுட்டின்
கிழக்கென வந்த வழக்குஎண் காண்பீரே
குண்டுசட் டிக்குதிரை யோட்டிகள் செய்துவரும்
தொண்டுக்கு ஓய்வளிக்கும் காண்

No comments:

Post a Comment