Wednesday, April 25, 2012

தமிழின மீட்சி

முன்னுரை


உலகத்தையே ஆண்ட தமிழினம் இன்று உலகில் பல் வேறு இடத்தில் சிதறித் தமிழின உணர்வை இழந்திட்டதோ என்று ஐயுற்றதால் விளைந்த வெண்பா இது. இந்த வெண்பா ஒரு விகற்ப பஃறொடை வெண்பா வாகும்.

தமிழின மீட்சி


திரைகட லோடி திரவியந் தேடி
தரைகட லெல்லாம் தமிழனின் ஆட்சி
புரையுந ரின்றே திகழ்ந்தது மாட்சி
புரைகொ ண்டயினம் புரண்டிட்ட வீழ்ச்சி
புரையோடிப் போயினும் பெற்றிடுமா மீட்சி
கரையேறும் காலம் எது

அருஞ்சொற்பொருள்


புரையுநர் - ஒப்பவர் (rivals, equals)
புரை - பெருமை
புரையோடி - infected புரையோடிய புண் என்பார்கள்.

விளக்கம்


விகற்பம் = எதுகை வகை (variety). எதுகையென்பது அடியின் முதலில் வரும் சீர்களின் இரண்டாவது எழுத்துப் பொருந்தி வருவதைக் குறிக்கும். அதே நேரத்தில் முதல் எழுத்து ஒலியளவில் (மாத்திரை) ஒத்திருக்க வேண்டும். எ.கா. பதுமை, புதுமை. ஆனால், மெட்டு, போட்டு இவ்விரண்டும் எதுகை ஆகாது. மெ - குறில், போ - நெடில் - ஆகவே ஒலியளவு மாறுபடும்.

பஃறொடை - பல தொடை. தொடை என்றால் இரண்டு அடிகள் எனப் பொருள். வெண்பா என்று பொதுவாகச் சொன்னால் அதில் நான்கு அடிகள் இருக்க வேண்டும். 5-லிருந்து 12 அடிகள் வரையில் அமையும் பாக்கள் பஃறொடை வெண்பாவாகும்.

மேலே நானெழுதிய “தமிழின மீட்சி” என்ற பா, நான்குக்கு மேற்பட்ட அடிகளையும் (6 அடிகள்), எல்லா அடிகளிலும் ஒரே எதுகை (ரை)யும் பெற்று வருவதால் அது ஒரு விகற்ப பஃறொடை வெண்பாவாகிறது.

4 comments:

  1. ஆட்சி, மாட்சி, வீழ்ச்சி, மீட்சி போன்ற இழைபுத் தொடைகள் கண்டிப்பாக வெண்பாவின் ஓசையைக் கெடுத்துவிடும். அவற்றைத் தவிர்த்துவிடவும். மேலும் சொற்களைப் பிரித்தெழுதாமல் எழுதக் கற்றுக்கொள்ளவும்.

    இந்த தங்கள் வரியைக் கவனிக்கவும்- 'கரையேறும் காலம் எது?'

    ஒவ்வொரு சீருக்கும் ஒவ்வொரு சொல் போட்டு எழுதியுள்ளீர்கள் அல்லவா? அதுபோல் பாமுழுக்க எழுதினால் படிக்க சுவையாகவும் நன்றாகவும் இருக்கும்

    ReplyDelete
  2. இங்கு கருத்தெழுதி வெளியிடும்போது சில எழுத்துக்களைக் காட்டி அவற்றை எழுதச்சொல்லும் ரீகாப் முறையை அகற்றிவிடவும்

    ReplyDelete
  3. அன்பு அகரன் அமுதன் அவர்களே, தங்கள் வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் நன்றி. இனி எழுதும் வெண்பாக்கலில் இழைபுத் தொடைகள் வரா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன். முழுச்சொல் கொண்டு பா முழுதும் எழுத முயற்சிக்கிறேன்.

    "CAPTCH"-வை நீக்கி விட்டு கருத்துகள் என் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் வண்ணம் மாற்றி விட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete