Tuesday, June 12, 2012

புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு

புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012-ல் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக நான் எழுதிப் பயிற்சியளித்தப் பட்டிமன்றத்தில் இடம் பெற்ற மாநாடு குறித்த வெண்பா, ஹைக்கூ, வசனநடைக் கவிதை இதோ:

புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு - வெண்பா

புலம்பெயர்ந்தோம் தாய்மண்ணை விட்டுவேறு நாடு
உளம்பெய ரோமுயிர்போ னாலு(ம்)மொழி விட்டு
இளம்தலைமு றைத்தமிழில் இன்புற் றிருக்க
உளம்பூரிக் கத்தமிழ்க் கல்வி வழங்கும்
கலிஃபோர் னியத்தமிழ்ப் பள்ளிக் கனவாம்
ஒளிதருங்கல் விக்கோர்மா நாடு

புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு - ஹைக்கூ

சொந்தபந்தம் விட்டு வந்தோம் வெளிநாடு
உயிர் விட்டு உடல் வந்தது போல, ஆனால்
எங்கள் உயிராய் தமிழ்
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு - வசனநடைக் கவிதை (புதுக்கவிதை)

தேடிவந்தோம் திரவியத்தை அயல் நாடு தனில்
கோடி கோடியாய் செல்வம் வந்தாலும் உயிர்
நாடியாய் எங்களுக்கு என்றும் தமிழ்
ஓடிவிளையாடிடும் எங்கள் பிள்ளைகளும்
நாடிவந்து தமிழ் கற்றிடுவார் தமிழ்க் கழகத்திலே
கூடிவந்து நடத்துகிறோம் மாநாடு

பட்டிமன்றத்தின் தலைப்பு “தமிழின் பொற்காலம் கடந்த காலமா? எதிர் காலமா”. தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலக் கலப்பின்றி இந்தப் பட்டிமன்றத்தில் பேசியது மட்டுமல்லாமல் இந்த வெண்பா, ஹைக்கூ, வசன நடைக்கவிதைகளையும் பேசியது மனதுக்கு மகிழ்ச்சியாயிருந்தது.

Saturday, June 2, 2012

விட்னி

விட்னி யெனுமொரு மாமலை சென்றிட்டேன்
சட்னி எனவான துச்சி தொடுமாசை
வானிலை வாட்டி வதைத்தது ஓர்நாளில்
என்னிலை இப்படி ஏனென நொந்திடாமல்
முன்னிலை லாட்டரியில் வென்றிட்ட சீட்டதைப்
பெற்றே தொடங்கினோம் மீண்டுமொரு நாளிலே
சற்றே மெதுவாய் தொடங்கியதால் மீண்டுமே
தூரம் அதிகம் துரிதமாய் எட்டாது
நேரம் கருதி சிகரமது ஏறாது
ஏக்கம் அடைந்து சிகரத்தை நோக்கினேன்
தாக்கம் விலகா மனது

அதித்தி

தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தேர்வில் 100% மதிப்பெண்கள் பெற்றதற்கு என் வாழ்த்துகள் அதித்தி!!! உனக்குத் தமிழ் கற்பித்த கலிஃபோர்னியத் தமிழ்க் கழக ஆசிரியை தேன் மொழி அவர்களுக்கும் அந்த வகுப்பில் அவருக்கு உதவியாயிருந்த தன்னார்வலர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!! உன்னுடன் தேர்ச்சி பெற்றிருக்கும் உன் வகுப்பு மாணவ மாணவியருக்கும் என் வாழ்த்துகள்!!!
உன் உழைப்புக்குக் கிடைத்த வெற்றிக்கு என்னால் இயன்ற ஒரு வெண்பா:

அதித்தி
மனப்பாடம் செய்யாது ஆர்வம் மிகுந்து
மனதூன்றிக் கற்றாயே வான்போற்றும் தாய்த்தமிழை
என்றுமே உன்னுழைப்பு ஏமாற்றி டாதென
வென்றாயே தேர்வினில் நூறு